Thursday, April 24, 2008

24.Apr.2008 - நல்லவனா கெட்டவனா???

நல்லவனா கெட்டவனா???
ரயில் நிலையத்தில்
கூலி வந்து கேட்ட பொழுது
வேண்டாம் என்று மறுத்துவிட்டு
பொருளை சுமந்து செல்லும் பொழுது
என் மனம் அலறியது -

நம்மால் முடியும் பொழுது
எதற்கு கூலி என்று உதவி
எதிர்பாராததால் நீ நல்லவனா...

இல்லை,
அந்தக் கூலியின் அன்றைய
வருமானத்தை குறைத்து விட்ட
வகையில் நீ கெட்டவனா என்று.

Friday, March 14, 2008

30.03.2005: நான் கலைஞன் அல்ல!!

நான் கலைஞன் அல்ல!!
என் இனியவளே,
உன்னைக் கவிபாட நான் கவிஞனும் இல்லை
உன்னை சிலை வடிக்க நான் சிற்பியும் இல்லை
என் நோய் அறிய நான் மருத்துவனும் இல்லை
உன் மனம் அறிய நான் ஞானியும் இல்லை...
ஆனால் பெண்ணே,
நீ வேறு நான் வேறு அல்ல,
நாம் ஒன்று தான் என்று உணரும்படி
என் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக
உன்னை காதலிக்கும் காதலனாக இருப்பேனடி.

Thursday, January 31, 2008

31.01.2008: இதனால் தானோ??

இதனால் தானோ??

பீரோவின் திறந்த கதவு
மூடாமல் உனக்காக காத்து இருக்கும்!

நாங்கள் பேசும் சாதாரண விஷயங்களும்
அக்கணத்தில் ரகசிய சம்பாஷணைகளாகும்!

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள்
யாவுமே ஊமைப் படங்களாகும்!

தேடித்தேடி வைத்த caller tune
எல்லாமே மௌன மொழி பேச ஆரம்பிக்கும்!

இப்படி நீ கண்ணயரும் பொழுதில்
யாவற்றையும் உன் வசப்படுத்தி வைப்பது

" நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே"
என்ற கடவுளின் கூற்றைப் போன்று இருப்பதால் தான்

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்களோ??

****** எங்களின் அதிதி குட்டிக்கு இந்த கவிதையை dedicate செய்கிறோம் :) ******

01.10.2007: எப்படியும் கடந்திடும்!!

எப்படியும் கடந்திடும்!!

சாலையின் மறுபக்கம்
உன்னைப் பார்த்தவுடன்
மிகவும் நெரிசலான போக்குவரத்தைக்கூட
பொருட்படுத்தாது உன்னை நோக்கி
கடக்கிறதடி என் மனம்!!

Monday, January 28, 2008

18.09.2007: ஆட்டோக்கள் இல்லையோ?

ஆட்டோக்கள் இல்லையோ?

"பெண்ணின் திருமண வயது - 21" - என்ற
வரியைத் தாங்கிய ஆட்டோக்கள்
சில ஊர்களில் இல்லை போலும் -
இன்றும் இருக்கிறது குழந்தைத் திருமணம்!!!

18.09.2007 : இரவு

இரவு

பகலில் கொளுத்திய வெயிலில்
பூமி கருத்து விட்டதோ -
இரவின் வருகை!

Wednesday, January 16, 2008

17.09.2007: தலைப்பு என்னவாயிருக்கும்?

தலைப்பு என்னவாயிருக்கும், இதைப் படிக்கும்போது யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள். அதோடு இந்த கவிதையில் வேறு ஏதேனும் புதுமை புலப்படுகிறதா என்றும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கவிதைக்கு கீழே தலைப்பையும், நான் புதுமை என்று எண்ணிச் செய்ததையும் சொல்லி இருக்கிறேன், பாருங்கள் :)

அவளுடைய நடை முன்
போல் நளினமாய் இல்லை
நன்றாகவே மாறியிருந்தது.
அவளுடைய உடையும் முன் போல்
கச்சிதமாக இல்லை - வெட வெடவென
சிக்கென்று இல்லாமல் பெரிதாக மாறியிருந்தது.
அவளுடைய எடையும் கூடி நிறைய மாறியிருந்தது.
அவளுடைய செயல்களில் இதற்கு முன்பு இருந்த
சுறுசுறுப்பு போய் சோம்பலாகவும் மாறியிருந்தது.
இப்படி அவளுடைய நடை உடை எடை செயல்
என அனைத்துமே மாறியிருந்தாலும் யாருக்கும்
அவள் மேல் கோபமோ வருத்தமோ இல்லை.
மாறாக அவள் மேல் கொண்ட மரியாதையும்
அன்பும் அனைவருக்கும் கூடியிருந்தது.
அவளுக்குள் மற்றுமொரு உயிரை
சுமந்து கொண்டிருக்கிறாள்
என்ற காரணத்தினால்.

தலைப்பு: கர்ப்பிணிப் பெண் / புள்ளதாச்சி பொம்பள
புதுமை அப்டினு நான் பண்ணதுங்கோஓஓஓ :) இந்த கவிதையை பார்த்தால் ஒரு புள்ளதாச்சியின் வயிறு மாதிரி இருக்கா? ஆமாம் அப்டினா நன்றிங்னா...இல்லைனா மறுக்கா கவிதையை நல்லா பாருங்னோவ்... :)